அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்
தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்)
வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்
(உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்
ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக
(நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா
(நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்
அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்
வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்
நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்
(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக